சென்னையில் ஒரு வாரத்துக்கு முன் காணாமல் போய்விட்டதாக புகாரளிக்கப்பட்ட சூளைமேட்டைச் சேர்ந்த வேல்விழி என்ற பெண், கோயம்பேடு சந்தை அருகே கொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டில், நர்சிங் மாணவியை, அவரது தோழியின் கணவனே, நகைக்காக கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி, கோயம்பேடு காய்கறிச்சந்தையில் வீசிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இளம்பெண் மாயமான ஒரு வாரத்திற்கு பிறகு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வடக்குப் புதுப்பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் 19 வயதான வேல்விழி. இவர், சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் முதல்தெருவில் தங்கி, விருகம்பாக்கத்தில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதியன்று தங்கியிருந்த வீட்டிலிருந்து புறப்பட்டு வேல்விழி புறப்பட்டுச் சென்றார்.
இவரது தந்தை ராஜேந்திரன் நடை பயிற்சி செல்லும்போது, வேல்விழியை தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி 6ம் தேதி காலை வேல்விழியை, தொடர்பு கொண்ட போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, 6,7,8 ஆகிய தேதிகளில் புகார் அளிக்காமல், கடந்த 9ஆம் தேதி தான் சூளைமேடு காவல்நிலையத்தில், தந்தை ராஜேந்திரன் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், வேல்விழியின் தோழி மகாலட்சுமி என்பவரின் கணவர் அஜீத்குமாரை சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.
அப்போது, வேல்விழியிடம், தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசுப் பொருள் அளிக்க பணம் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால், கொலை செய்துவிட்டு, நகையை எடுத்துச் சென்றதாகவும், அஜீத் குமார் கூறியுள்ளான். பின்னர், வேல்விழி உடலை சாக்குப்பையில் போட்டு கட்டி, கோயம்பேடு சந்தைப் பகுதியில் வீசிச்சென்றதையும் ஒப்புக்கொண்டான்.
இதனைத் தொடர்ந்து, அவனை கோயம்பேடுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவன் சுட்டிக்காட்டிய இடத்திலிருந்து, வேல்விழியின் சடலத்தை அழுகிய நிலையில் மீட்டனர். 3 மாதத்திற்கு முன்பு தான் வேல்விழியின் தோழி மகலாட்சுமியை காதல் திருமணம் செய்த அஜித் தற்போது கொலை வழக்கில், கைதாகியிருக்கிறான்.
No comments:
Post a Comment